நாடு தழுவிய அளவில் இளைஞர்களைச் சென்றடைவதற்கான ஒரு புதிய அத்தியாயம்
YSS Youth Services அமைப்பு, 2026-ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 6 வரை இமாச்சலப் பிரதேசத்தின் சோலனில் உள்ள ஷூலினி பல்கலைக்கழகத்தில், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான தனது மிகப்பெரிய ஒரு வார கால கோடைக்கால முகாம்களை நடத்தியது. 11 முதல் 17 வயதுக்குட்பட்ட, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளும் அவர்களுக்கென நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி முகாம்களில் பங்கேற்றனர்.
இம்முகாம்கள் மூன்று வெவ்வேறு வயதுப் பிரிவினரின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன — இளையோர் (11–13), இடைப்பட்ட பதின்ம வயதினர் (14–15) மற்றும் மூத்தோர் (16–17). மேலும், 18–23 வயதுக்குட்பட்ட இளம் சாதகர்கள் எதிர்காலத்தில் அதிகப் பொறுப்புள்ள சேவைப் பணிகளை ஏற்கும் நிலைக்கு வளரலாம் என்பதற்காக உதவிக்குழுத் தலைவர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ‘எப்படி வாழ வேண்டும்’ குறித்த போதனைகளின் அடிப்படையில், உடல், மனம் மற்றும் ஆன்மாவின் சமச்சீரான வளர்ச்சியை இம்முகாம் ஊக்குவித்தது. காலையிலும் மாலையிலும் ஒருமுகப்பாட்டுடன் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம் செய்வது என்ற குழுப்பயிற்சிகளான அன்றாட ஆன்மீக முறைகளும் ஒழுக்கநெறிகளும் இம்முகாமின் முக்கிய அம்சங்களாக இருந்தது.
அச்சமின்மை, ஒருமுகப்பாடு, இச்சாசக்தி, நட்பு மற்றும் உள்ளுணர்வு போன்ற நடைமுறைக்கு ஏற்ற தலைப்புகளில் YSS சன்னியாசிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் நடத்தப்பட்ட எப்படி வாழ வேண்டும் என்ற வகுப்புகள், குறிப்பிட்ட வயதுக் குழுவின் விவாதங்களுடன் இணைந்து, வாழ்க்கையின் முக்கியக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள பதின்ம வயதினருக்கு உதவின. இவ்வகுப்புகளின் நிறைவாக, YSS தியான முறைகளான பிரபஞ்ச சக்தியால் உடலுக்கு சக்தியூட்டும் கலை, ஹாங்-ஸா உத்தியின் மூலம் மனத்தை ஒருமுகப்படுத்துதல் மற்றும் ஓம் உத்தியின் மூலம் இறைவனுடன் ஒன்றிணைதல் குறித்த சன்னியாசிகளின் அறிவுறுத்தல்கள் மூலம் தகுதியுடைய பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர்.
பெற்றோர்களின் நற்சான்றுகள்
ஷூலினி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கோடைக்கால முகாமின் மூலம் தங்கள் குழந்தைகள் எவ்வாறு மாற்றமடைந்தனர் என்பது குறித்து, நிறைந்த நன்றியுடன் பெற்றோர்கள் YSS-க்கு எண்ணற்ற செய்திகளை அனுப்பியுள்ளனர். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
[எங்கள் மகன்] வீட்டிற்கு வந்ததும், முகாமில் தான் கற்றுக்கொண்ட மற்றும் அனுபவித்த அற்புதமான விஷயங்களைப் பற்றி இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தான். நான் வழக்கமாக ஹாங்-ஸா பயிற்சியைச் செய்கிறேனா என்று அவன் என்னிடம் கேட்டான். அங்கிருந்த தன்னார்வலர்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட அவன், தானும் பிற்காலத்தில் ஒரு தன்னார்வலராக மாற விரும்புகிறான்.
நேற்று என் மகள்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதையும், நாள் முழுவதும் கீதமிசைப்பதையும் காண்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கீதமிசைத்து வருகின்றனர்; அது அவர்கள் வாழ்வில் கொண்டு வந்துள்ள நேர்மறையான ஆற்றலை என்னால் இப்போதே காண முடிகிறது. காலப்போக்கில், இந்த உன்னதமான பயிற்சிகள் அவர்களின் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துவிடும் என்பதை நான் அறிவேன். அவர்கள் தங்கள் அனுபவங்களான, ஸ்வாமிஜி என்ன கூறினார், குழுத் தலைவர் அவர்களை எவ்வாறு வழிநடத்தினார் மற்றும் அவர்கள் இதயம் தொட்ட அனைத்து சிறிய தருணங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்வதைக் கேட்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.
முகாமிலிருந்து திரும்பிய என் மகனிடம் வியக்கத்தக்க வகையில் நேர்மறை மனப்பான்மையையும், புதிய தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கண்டேன். அவன் மீது அந்த முகாம் ஏற்படுத்தியுள்ள நேர்மறைத் தாக்கத்தைக் காண்பது உண்மையிலேயே மனத்தை நெகிழச் செய்கிறது. குழுவினர் காட்டிய அர்ப்பணிப்பு, அக்கறை, வழிகாட்டுதல் மற்றும் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தன. குழந்தைகளுக்காக இத்தகைய அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள அனுபவத்தை உருவாக்க அவர்கள் செலவிட்ட நேரத்தையும் முயற்சியையும் நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.
உடனடி நிறைவு தேடும் இந்த வேகமான உலகில், இந்த முகாம் தம்மைச் சுற்றியும் தமக்குள்ளும் நோக்க குழந்தைகளுக்கு எந்தவித கவனச்சிதறல்களும் அற்ற ஓர் அற்புதமான சூழலை வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் நான் மிகவும் ரசித்த விஷயம் என்னவென்றால், அக்கறையும் நற்பண்புகளும் நிறைந்த சூழலில் ஆன்மீகம், ஒழுக்கம், கற்றல், மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி ஆகியவை சரிசமமாக குழந்தைகளுக்கு அழகுடன் அளிக்கப்பட்டதுதான். குழந்தைகள் தங்களுடனும், பிறருடனும், குருஜியின் போதனைகளுடனும் மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் தொடர்புகொள்ள உதவும் வகையில், இந்த முகாமின் ஒவ்வொரு அம்சமும் மிகுந்த சிந்தனையுடன் அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, NCC மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான முகாம்களை நான் தனிப்பட்ட முறையில் நடத்தி வருகிறேன். 10 நாட்கள் நடைபெறும் ஒவ்வொரு முகாமிலும் 500 மாணவப் படைவீரர்கள் பங்கேற்பார்கள். ஆண்டுக்கு ஐந்து முறை நாங்கள் இத்தகைய முகாம்களை நடத்துகிறோம். இருப்பினும், சிறந்த நோக்கங்கள் இருந்தும் மாணவர்களை ஆன்மீகரீதியாகத் தூண்ட விரும்பியபோது கூட, அது எங்களால் இயலவில்லை. ஆனால், எங்களால் சாதிக்க முடியாததை ஷூலினியில் நடைபெற்ற YSS முகாம் சாதித்தது. குழந்தைகள் தங்கள் உள்ளார்ந்த ஆன்மீக பரிமாணத்தை உணரும் வாய்ப்பைப் பெற்றதன் மூலம் பயனடைந்தனர். YSS அமைப்பு என் மகனுக்கு வழங்கிய இந்த ஆன்மீகப் பரிசிற்காக என் உணர்வுகளை போதுமான வார்த்தைகளால் முழுமையாக விவரிக்க இயலவில்லை.
முகாம்களின் சிறப்பம்சங்கள் அடங்கிய காணொளி
அற்புதமான இயற்கை பின்னணி
சிவாலிக் மலைத்தொடரின் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஷூலினி பல்கலைக்கழகம், 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இவ்வளாகம் ரம்மியமான நடைபாதைகள் மற்றும் பைன் மரக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. அழகான காட்சிகள், குளிர்ந்த காலநிலை மற்றும் அமைதியான சூழல் ஆகியவற்றை இவ்விடம் வழங்குகிறது. இயற்கையின் இத்தகைய உத்வேகம் தரும் சூழல், முகாமில் பங்கேற்றவர்களின் அனுபவத்தில் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது; இது மகிழ்ச்சியான கற்றலுக்கும், இயற்கையில் இறைவனின் இருப்பை ஆழமாக உணர்ந்து போற்றுவதற்கும் வழிவகுத்தது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு தனித்தனி முகாம்கள்
YSS/SRF தலைவரின் செய்தி
YSS/SRF-இன் தலைவரும் ஆன்மீகத் முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் ஊக்கமளிக்கும் செய்தியை மூத்த YSS சந்நியாசியான ஸ்வாமி லலிதானந்த கிரி வாசித்து விளக்கியதுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது (கீழே காண்க).
இளம் பருவத்தினருக்கான ஆன்மீகப் பயிற்சி
கூட்டுத் தியானம் மற்றும் உத்தி மறு ஆய்வு வகுப்புகள்
சிறுவர்களுக்கான முகாமின் ஒவ்வொரு நாளும், சக்தியூட்டும் உடற்பயிற்சிகளும் தியானமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் குழுப்பயிற்சியாக நடைபெற்றன.
எப்படி வாழ வேண்டும்- வகுப்புகள்
ஸ்வாமி லலிதானந்தா மற்றும் ஸ்வாமி நிர்மலானந்தா ஆகியோர் பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கக் கூடங்களில் “உள்ளுணர்வு” மற்றும் “அச்சமின்மை” குறித்த கலந்துரையாடல் சார்ந்த வகுப்புகளை நடத்தினர். அதனுடன் கூட அனுபவம் வாய்ந்த குழுத் தலைவர்கள் “இச்சாசக்தி” போன்ற பிற பயனுள்ள தலைப்புகள் பற்றி ஆராய்ந்து விவாதித்தனர்.
தினசரி சுய-ஆய்வு
ஒவ்வொரு நாளின் இறுதியிலும் தமது தங்கும் அறைகளில் குழுவாகக் கூடி ‘குரு கதா’ (YSS-இன் ஆறு குருமார்களின் வாழ்க்கையிலிருந்து கதைகள்), கீதை பாராயணம், கலைநிகழ்ச்சிப் பயிற்சி மற்றும் சுய-ஆய்வு (சுய-ஆய்வு அட்டவணையின் உதவியுடன்) ஆகியவற்றில் குழந்தைகள் ஈடுபட்டனர். தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆன்மீகமயமாக்குவதற்கான வழிமுறைகளை இளம் உள்ளங்களில் பதிய வைப்பதே இதன் நோக்கமாகும்.
பாபாஜியின் குகை
“பாபாஜியின் குகை” யைப் போல அமைக்கப்பட்ட பாபாஜியின் முழு உயர திருவுருவம் நிறுவப்பட்ட காட்டுப் பகுதி குகைக்குச் செல்வது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலாகும்.
கல்வி மற்றும் பொழுதுபோக்குச் செயல்பாடுகள்
சிறுவர்களுக்கான இந்த முகாமில், ஒழுக்கம் மற்றும் சுய-சிந்தனைப் பண்புகளை வளர்க்கும் அதே வேளையில், சிறுவர்களையும் பதின்ம வயதினரையும் மகிழ்ச்சியான முறையில் ஈடுபடுத்தும் பரந்த அளவிலான பல்வேறு செயல்பாடுகளும் இடம்பெற்றிருந்தன.
வளாகச் சுற்றுப்பயணம்
வளாகச் சுற்றுப்பயணங்கள், மூத்த சிறுவர்களுக்கு நவீன அறிவியல் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.
விளையாட்டுகளும் போட்டிகளும்
விளையாட்டுகளில் சிறுவர்களுக்கான டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து மற்றும் பிற போட்டிகள் அடங்கும்.
காட்டில் நடைப்பயணம்
காட்டுப் பாதைகளில் மேற்கொள்ளப்படும் நடைப்பயணம், மூத்த பதின்ம வயதினரிடையே பிரபலமான ஒரு செயல்பாடாகும்.
காடு வளர்ப்பு இயக்கம்
பேக்கிங்
கலை மற்றும் கைவினைப்பொருட்கள்
குழுக்களாக குடும்பத்தினர் போல் உணவருந்துதல்
9 முகாம் பங்கேற்பாளர்கள் மற்றும் 3 வயது வந்த குழுத் தலைவர்கள் அடங்கிய குழு ஒவ்வொன்றும் குடும்ப உணர்வை உருவாக்க, தினமும் மூன்று வேளைகளும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். யோகக் கோட்பாடுகளைப் பின்பற்றி, அவர்கள் மௌனமாக உணவருந்தியதோடு, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவும், உணவு உண்ட பிறகு சுத்தம் செய்யும் பணிகளில் உதவவும் செய்தனர்.
கலாச்சார மற்றும் ஆன்மீக விழாக்கள்
கலாச்சார நிகழ்ச்சி
முகாமில் இருந்தவர்கள், குருஜியின் போதனைகளிலிருந்த கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களைக் கொண்ட ஒரு மாலை நேர நிகழ்ச்சியை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு இசைக்கருவிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட பிரபஞ்ச கீதங்களின் குழு நிகழ்ச்சியும் இடம்பெற்றது (கீழே காண்க).
ஆன்மீக மேளா
முகாமின் கடைசி நாளில், உயர் துவாபர யுகத்தின் வாழ்க்கை முறையை கண்முன் கொண்டுவரும் வகையிலான ஒரு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியை குழுத் தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். உள்ளுணர்வு, மனதை அறிதல், நினைவாற்றல் மற்றும் குழுப்பணி ஆகியவற்றை மையமாகக் கொண்ட விளையாட்டுகளைக் குழந்தைகள் விளையாடினர். ஆன்மீக விழா பெரும் வரவேற்பைப் பெற்றது!
நற்சான்றுகள்
“தியான அமர்வுகள் மிகச் சிறப்பாக இருந்தன; எப்படி வாழ வேண்டும் குறித்த வகுப்புகள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. மொத்தத்தில், எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்தனர்; அதிலும் குறிப்பாக, கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்யும் அமர்வு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.”
“இது என் ஆண்டின் மற்றும் வாழ்வின் மறக்க முடியாத ஒரு முகாமாய் அமைந்தது... எனக்குப் புதிய நண்பர்களும் கிடைத்தனர். ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல முகாம்; சக்தியூட்டும் உடற்பயிற்சிகளும் தியானங்களும் மிகவும் நன்றாக இருந்தன.”
“தியானம் மற்றும் அதன் உத்திகள் தொடர்பான அனைத்தும் சிறப்பாக இருந்தன. உண்மையைச் சொல்லப்போனால், இந்தக் முகாம் திட்டமிடப்பட்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மலையேற்றம், திரைப்படம், அறிவியல் சுற்றுலா, பாறைகளில் ஓவியம் வரைதல், பாபாஜியின் குகை மற்றும் அது போன்ற சிறப்பம்சங்கள் ஆகும்.”
தொடக்க நிகழ்ச்சி
பதின்ம வயதினருக்கான ஆன்மீகப் பயிற்சி
குழு தியானங்கள் மற்றும் உத்திகளுக்கான மறு ஆய்வு வகுப்புகள்
சிறுமிகளுக்கான முகாமின் ஒவ்வொரு நாளும், சக்தியூட்டும் உடற்பயிற்சிகளும் தியானமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் குழுப்பயிற்சியாக நடைபெற்றன.
பிரபஞ்ச சக்தியைக் கொண்டு உடலை மீள்செறிவூட்டும் கலையை ஸ்வாமி லலிதானந்தா விளக்குகிறார்.
எப்படி வாழ வேண்டும் வகுப்புகள்
பதின்ம வயதினருடனான கலந்துரையாடல்களை வழிநடத்துவதற்காகப் பிரத்யேகமாகப் பயிற்சி பெற்ற அனுபவமிக்க ஆசிரியர்கள், நட்பு, மன உறுதி மற்றும் கருணை போன்ற தலைப்புகளில் உள்ளரங்க மற்றும் திறந்தவெளி அமைப்புகளில் வகுப்புகளை நடத்தினர் (கீழே காட்டப்பட்டுள்ளபடி).
பாபாஜியின் குகை
சிறுமிகளுக்கான விடுதிப் பகுதியில் அவர்கள் பயன்படுத்த பிரத்யேகமாக “பாபாஜி குகை” அமைக்கப்பட்டது. அங்கு குழுத் தலைவர்கள் கீதமிசைத்தல், தியானம் மற்றும் கதை கூறுதல் ஆகியவற்றை வழிநடத்தினர்.
கல்வி மற்றும் பொழுதுபோக்குச் செயல்பாடுகள்
சிறுமிகளுக்கான இந்த முகாமில் பல்வேறு வகையான செயல்பாடுகள் இடம்பெற்றன; இவை குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் ஒழுக்கம் மற்றும் சிந்தனைப் பண்புகளை ஊட்டுவதோடு, அவர்களை மகிழ்ச்சியான ஈடுபாட்டுடன் இருக்கவும் செய்தன.
வளாகச் சுற்றுப்பயணம்
விளையாட்டுகளும் போட்டிகளும்
காட்டில் நடைப்பயணங்கள
பதின்ம வயதினர், தியானம் மற்றும் சிற்றுண்டி மதிய உணவுடன் கூடிய ரம்மியமான நடைப்பயணங்களில் பங்கேற்கின்றனர்.
பேக்கிங்
கலை மற்றும் கைவினைப்பொருட்கள்
பல்கலைக்கழக உறைவிடக் கலைஞரால் பாறை ஓவிய அமர்வுகள் வழங்கப்படுகின்றன. முகாமில் பங்கேற்பவர்கள் தாங்கள் வண்ணம் தீட்டிய பாறைகளைக் காட்டுகிறார்கள்…
…மற்றும் பிற கலை மற்றும் கைவினை வடிவமைப்புகள்.
குழுக்களாக குடும்பத்தினர் போல் உணவருந்துதல்
சிறுவர்களுக்கான முகாமில் இருந்தது போலவே, இங்கும் 9 முகாம் பங்கேற்பாளர்கள் மற்றும் 3 வயது வந்த குழுத் தலைவர்கள் அடங்கிய குழு ஒவ்வொன்றும் குடும்ப உணர்வை உருவாக்க, தினமும் மூன்று வேளைகளும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். யோகக் கோட்பாடுகளைப் பின்பற்றி, அவர்கள் மௌனமாக உணவருந்தியதோடு, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவும், உணவு உண்ட பிறகு சுத்தம் செய்யும் பணிகளில் உதவவும் செய்தனர்.
கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்வுகள்
கலாச்சார நிகழ்ச்சி
முகாமின் இறுதி நாளில், மாணவிகளால் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஆன்மீக விழா
சிறுவர்களுக்கான முகாமில் குழுத் தலைவர்கள் எதிர்கால ‘துவாபர யுக’ச் சூழலை உருவாக்கியிருந்த நிலையில், சிறுமிகளுக்கான முகாமில் குழுத் தலைவர்கள் பகவான் கிருஷ்ணரின் காலமான, கடந்த ‘துவாபர யுக’த்தின் இறுதிப் பகுதிக்கு பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்றனர். கோபியர்களைப் போல வேடமணிந்த பங்கேற்பாளர்கள் எளிய விளையாட்டுகளை விளையாடியதுடன், ‘ராஸ லீலா’ நிகழ்வை மகிழ்ச்சியான பக்திப் பரவசத்துடன் நடித்துக் காட்டி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்..
நற்சான்றுகள்
“இது நான் கலந்துகொள்ளும் முதல் முகாம்; இதுபோல ஒரு அற்புதமான அனுபவத்தை நான் இதற்கு முன் பெற்றதில்லை! இந்த பல்கலைக்கழக வளாகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது; குளிர்ச்சியான மற்றும் அமைதியான சூழல், மரகதப் பச்சை நிற மரங்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் ஒலிக்கும் பறவைகள் என அனைத்தும் இந்த முகாமிற்கு ஏற்ற ஒரு சிறப்பான உணர்வை அளிக்கின்றன. இங்கு நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளையும், குறிப்பாகத் திரையிடப்பட்ட திரைப்படத்தையும் நான் மிகவும் ரசித்தேன். வாழ்க்கையில் மிக முக்கியமான பல விஷயங்களை இந்த முகாம் எனக்குக் கற்றுக்கொடுத்தது; இல்லையெனில் நான் அவற்றைக் கவனித்திருக்கவே மாட்டேன். அடுத்த முகாமில் கலந்துகொள்ள நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
“இறைவனிடம் நன்றியுணர்வுடன் இருப்பதுதான் ஆன்ம அனுபூதிக்கான சிறந்த வழி என்பதை நான் நினைவுகூர்ந்தேன். இனிவரும் காலங்களில் நான் 'ஹாங்-ஸா உத்தியைபயிற்சி செய்வேன் மேலும் தியானத்தையும் செய்வேன். இந்த முகாம் மிகச் சிறப்பாக இருந்தது, இங்கு வழங்கப்பட்ட சேவைகளும் நன்றாக இருந்தன.”
“அர்த்தமுள்ள நட்புகள், அக்கறையுடனும் ஆழமான புரிதலுடனும் செயல்பட்ட தன்னார்வலர்கள், மற்றும் அனைவரும் அனைத்தும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட விதம் ஆகியவை என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்! தியானப் பயிற்சிகள் மனதை வளர்ப்பதாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருந்தன. விளையாட்டு நடவடிக்கைகள் உடல் வலிமையையும் குழுவாகச் செயல்படும் திறனையும் வளர்க்க மிகவும் உதவின! உணவு சாத்வீகமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், மிகவும் சுவையாகவும் இருந்தது.”
“இந்த ஆண்டு முகாமில் நான் ஒருபோதும் மறக்காத விஷயங்கள்: அங்குள்ள வாழ்க்கை முறை, அன்றாட நடைமுறைகள் மற்றும் எங்கள் குழுவிற்கு ஒதுக்கப்பட்ட அட்டவணை ஆகியவைதான். நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்; மேலும் என்னை நானே ஒரு சிறந்த நபராக மேம்படுத்திக்கொண்டேன். இந்த முகாமில் நிலவிய ஆழ்ந்த அமைதியை நான் நிச்சயமாக ஒருபோதும் மறக்கமாட்டேன். எனக்குத் தேவை என்று நான் அறியாமலேயே இருந்த அந்த மகிழ்ச்சி மற்றும் ஒளியை என் வாழ்வில் கொண்டு வந்ததற்கு YSS-க்கு மிக்க நன்றி.”
நிறைவு நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர்
YSS-இன் மூத்த சன்னியாசியான ஸ்வாமி ஸ்மரணானந்தா, சிறுவர் மற்றும் சிறுமியருக்கான முகாம்களின் நிறைவு விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். YSS-இன் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான இரு முகாம்களையும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நடத்தத் தங்கள் பல்கலைக்கழகம், அதன் வசதிகள் மற்றும் பணியாளர்களின் உதவியை வழங்கியதற்காக, கோஸ்லா குடும்பத்தினருக்கு யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சார்பாக அவர் பாராட்டுக்களையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.
நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இறைவன் அளித்த வாய்ப்புகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தி, மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று முகாமில் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்களை எடுத்துரைத்தார். ஒரு ஆப்பிள் விதையைக் கையில் ஏந்தியவாறு, ஒரு சிறிய விதை வளர்ந்து பல கனிகளைத் தரும் மாபெரும் மரமாக மாறுவதைப் போல, அவர்களது வாழ்க்கையும் தமக்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாகவும் வளமானதாகவும் அமைய வேண்டும் என்று ஸ்வாமி ஸ்மரணானந்தா சுட்டிக்காட்டினார்.
குருவின் பாதுகாப்புக் குடை
முகாம்கள் தொடங்குவதற்கு முந்தைய நாட்களில், சோலன் நகரில் வெப்பமான வானிலையும் தொலைவில் காட்டுத்தீயும் காணப்பட்டன. ஆனால் முகாம் தொடங்கிய நாளன்று, மேகங்கள், மழை மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவற்றின் வடிவில் குருவின் பாதுகாப்புக் குடை அனைவர் மீதும் கவிழ்ந்தது. வாரம் முழுவதும் அவ்வப்போது பெய்த மழையாலும் மேகமூட்டத்தாலும், நிகழ்ச்சிகள் இனிமையான வானிலையில் தொடர்ந்து நடைபெற்றன. ஆச்சரியம் என்னவென்றால், முகாம்கள் முடிந்த மறுநாளே சூரியன் மீண்டும் சுட்டெரிக்கும் வகையில் வெளிப்பட்டது!
நவீன வசதிகளுடன் கூடிய அழகான இமயமலை வளாகத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க YSS முகாமின் மகத்தான வெற்றிக்கு, தன்னார்வலர்கள் மற்றும் குழுத் தலைவர்களின் ஆதரவும், அதே வேளையில் மகத்தான குருமார்களின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆசிகளுமே காரணமாக அமைந்தன.
கீழே உள்ள படத்தில், “இறைவனால் அனைத்தும் சாத்தியமே!” என்று எழுதப்பட்ட பலகையைச் சிறுமிகள் சுட்டிக்காட்டுவதன் மூலம் முகாமில் பங்கேற்றவர்களின் நன்றியுணர்வு வெளிப்படுகிறது.























